வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் – சுதந்திரக் கட்சி

டக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாக இருந்தால் அதில் எவ்வித சிக்கலும் இல்லை.

நாம் அதிகாரப்பகிர்வை எதிர்ப்பவர்கள் அல்லர். ஆனால், தேர்தலை இலக்காகக் கொண்டே வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார் என்றால் அது நியாயமற்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கும், வடக்கு – கிழக்கு பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் அதிகாரப்பகிர்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் நேற்று வியாழக்கிழமை (11) சுதந்திர கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வினவியபோது பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் டி சில்வா இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டது. கட்சி ரீதியாக அழைப்பு விடுக்கப்படாமை தவறாகும். எவ்வாறிருப்பினும், இவ்வாறானதொரு அழைப்பு கிடைக்கப்பெற்றவுடனேயே அவர் கட்சி தலைமைத்துவத்துக்கு இது தொடர்பில் அறிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அதிகாரம் பகிரப்படுவதை எதிர்க்கும் கட்சியல்ல. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மையில் வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக உணர்வுபூர்வமாக இந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் என்றால் அதில் எவ்வித சிக்கலும் இல்லை.

எவ்வாறிருப்பினும், இனிவரும் காலங்களில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை மறைமுக நோக்கமாகக் கொண்டே ஜனாதிபதி இந்த பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்துள்ளார் என்ற நிலைப்பாடே பரவலாக காணப்படுகிறது. உண்மையில், இதுதான் ஜனாதிபதியின் நோக்கம் எனில் எம்மால் அதற்கு இணங்க முடியாது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு சிங்கள வேட்பாளருக்கும் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால்  இலகுவாக வெற்றி பெற முடியும் என்ற எண்ணம் காணப்படலாம். இவ்வாறு ஜனாதிபதியின் இலக்கு தேர்தல் வெற்றி என்றால் அது நியாயமற்றதாகும் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *