முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஏற்பாடு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் மே 18ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் குறித் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பேரினவாத மேலாதிக்கத்தின் தமிழினவழிப்புச் சிந்தனையின் கொடிய கோரப்பற்கள் முள்ளிவாய்க்கால் மண்ணின் பிடியில் அடைக்கலம் அடைந்த ஈழத்த்தமிழினத்தின் இதயத்தில் ஆழப்பதிந்த நாட்கள் கடந்துபோய் 14 ஆண்டுகள் நிறைவடையும் நாள் மே 18.

மனிதாபிமானத்தையும் மனித குல நலனையும் கையிலெடுத்து நவகாலணித்துவத்தை நிறுவும் கருவிகளாய் அவற்றை பாவித்து நிற்கும் இன்றைய நவீன உலக ஒழுங்கின் கர்த்தாக்கள் செயலின்றி பார்த்திருக்க, நடுநிலை வகிக்க வென்று வந்தவர்கள் நாதி இன்றி நாவடக்கம் காத்திருக்க துடிக்கத்துடிக்க நாம் கொத்துக்குண்டுகளாலும் கதிரியக்க காரணிகளாலும்  நாகரிக உலகம்  மனித குலத்திற்கொவ்வாது என தடை செய்த ஆயுதங்களாலும் போர் முறைகளாலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் பூவாய்ப், பிஞ்சாய், காயாய், பழமாய்  வேறுபாடுகள் கடந்து இனப்படுகொலை செய்யப் பட்ட நாட்கள் நடந்து முடிந்து14 ஆண்டுகள் கடந்துபோய்  மே 18  உடன் நிறைவடைகின்றது.

முள்ளிவாய்க்கால் வாரத்தில் (மே 11-18), முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறி தமிழினப் படுகொலை நினைவுத்தினத்தை நீதி வேண்டிய பயணத்தில் வினைத்திறன்மிக்கதாக்க தமிழ்த் தேசியத்தை நாளாந்த தேசியமாக உள்வாங்கி அடுத்த கட்ட நகர்வுக்கான உத்திகளை வகுக்க வேண்டி வரலாற்றுக்கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

இந்நினைவேந்தல் தொடர்பான நிதி சேகரிப்புக்கள் தாய் நிலத்திலோ புலம்பெயர்த் தேசங்களிலோ  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் அனுமதிக்கப்படவில்லை என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *