குருந்தூர் மலை விவகாரத்தை விசாரணை செய்து வந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரீ.சரவணராஜா, தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக குறிப்பிட்டு இராஜினாமா செய்தமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு விசாரணைக்கான உத்தரவு குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரீ.சரவணராஜா, அண்மை காலமாக கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திர தூதரகங்களுடன் மிக நெருக்கமான தொடர்புகள் வைத்திருந்ததாக புலனாய்வு பிரிவு ஜனாதிபதி அலுவலகத்திற்கு அறிக்கை சமர்பித்துள்ளது.
நீதவான் ரீ.சரவணராஜா, தனக்கு உயிரச்சுறுத்தல் உள்ளதாக பொலிஸ் நிலையத்திலேயோ அல்லது நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவிலோ முறைப்பாடு அளித்திருக்கவில்லை.
எனினும் நீதவான் ஒருவருக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே இது குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட நீதவானுக்கு உள்ள உயிரச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருடன் நேற்று கலந்துரையாடியுள்ளார்.
எவ்வாறாயினும் கடந்த 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீதவான் ரீ.சரவணராஜா வெளிநாடொன்று சென்றுள்ளதுடன், அவர் தனது இராஜினாமா கடிதத்தை 23 ஆம் திகதி சனிக்கிழமை நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளார்.
இதேவேளை சட்டமாதிபர் குறித்து நீதவான் ரீ.சரவணராஜா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க சட்டமாதிபரிடம் வினவியுள்ளார்.
நீதவான் ரீ.சரவணராஜாவை பிரதிவாதியாக சுட்டிக்காட்டி மேன்முறையீட்டு நீதின்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகுமாறு, நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு ஊடான கோரிக்கைக்கு அமைவாக நீதவான் சரவணராஜாவுடன் கலந்துரையாடியதாக இதன் போது சட்டமாதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சட்டமாதிபர் திணைக்களத்தின் சிரேஸ்ட சட்டத்தரணிகள் மூவரின் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரீ.சரவணராஜாவுடன் சட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியதாகவும், இந்த வழக்கில் பிரதிவாதியாக முல்லைத்தீவு நீதவானை பெயிரிட்டமை தவறு என்பதை நீதவான் சார்பில் ஆஜராகிய தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் சட்டமாதிபர் ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
மறுப்புறம் முல்லைத்தீவு நீதவான் வெளிநாட்டு இராஜதந்திர தூதரகங்கள் சிலவற்றுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளதாக புலனாய்வு பிரிவு ஜனாதிபதி அலுவலகத்திற்கு அறிவித்துள்ளது.
எனவே முல்லைத்தீவு நீதவான் குறித்த விடயத்தில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடிய விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

