மீண்டும் குடும்ப ஆட்சியையோ, பரம்பரை ஆட்சியையோ மக்கள் ஏற்படுத்தி விடக்கூடாது – விஜயதாச ராஜபக்ஷ

நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்யும் முக்கிய பொறுப்பு அடுத்த வருடம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

எனவே குடும்ப ஆட்சியையோ, பரம்பரை ஆட்சியையோ மீண்டும் தோற்றுவிக்காமல் மக்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்று நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் துயரங்களையும், நெருக்கடிகளையுமே அனுபவித்து வருகின்றனர். தவறான ஆட்சியாளர்களிடம் நாட்டை ஒப்படைத்ததன் காரணமாகவே அனைத்து மக்களும் அந்த பாவத்தை அனுபவிக்க வேண்டியேற்பட்டது. 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஆண்டாகும். அடுத்த வருடம் நிச்சயம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும். அதனைக் காலம் தாழ்த்தவோ, மாற்றவோ எவருக்கும் அதிகாரம் இல்லை.

மக்களுக்கு புதிய எதிர்பார்ப்புக்களை எதிர்பார்க்கக் கூடிய ஆண்டாக 2024 அமையும். நாட்டை ஆதரிக்கின்ற, சாதாரண மக்களின் பிரச்சினைகளை உணர்கின்ற, வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய அறிவுள்ள, சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக் கூடிய சிறந்த தலைவரை தெரிவு செய்ய வேண்டியது  மக்களுக்கு வழங்கப்படும் பொறுப்பாகும்.

மீண்டும் வர்த்தகர்களிடம் நாட்டைக் கையளிப்பதோ, குடும்ப ஆட்சியை மேற்கொள்பவர்களை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதோ, பரம்பரையிலுள்ளவர்களை தெரிவு செய்வதோ நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும். எனவே மக்கள் அறிவுடன் சிந்தித்து தீர்மானத்தை எடுக்க வேண்டும். மக்களால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் நாம் ஏற்றுக் கொள்வோம்.

வரி அதிகரிப்பு காரணமாக மக்களுக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளமை உண்மையாகும். எனனும் நாம் அரசாங்கம் என்ற ரீதியில் விரும்பி அதனை செய்யவில்லை. இதற்கு முன்னர் காணப்பட்ட அரசாங்கங்களால் இழைக்கப்பட்ட பாவங்களுக்கு விமோட்சனம் தேடும் நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே விருப்பமின்றியேனும் அந்த சுமையை நாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை எனில், எமது எதிர்காலம் நிரந்தரமாக கேள்விக்குறியாகிவிடும்.

அடுத்த வருடத்தின் முதல் இரண்டு அல்லது மூன்று காலாண்டுகளில் இந்த சுமையை நாம் தாங்கிக் கொள்ள வேண்டும். அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடைபெறும். பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதைக் கூற முடியாது. அது ஜனாதிபதியின் முடிவுக்கமையவே இடம்பெறும். எந்த தேர்தலானாலும் நாட்டுக்கு பொறுத்தமான ஆட்சியும், தலைமைத்துவமும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *