மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வு

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கை தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது.

இந்த விடயம் குறித்து பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுளா பெர்னாண்டோவிடம் வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் தொகையை ஈடு செய்யும் வகையில், மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இவ்வருடம் எதிர்பார்த்த அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனமையினால், மின்சார உற்பத்திக்கு கூடுதல் செலவு ஏற்பட்டதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த வருடம் 4500 கிகாவகட் நீர் மின் உற்பத்தியை மேற்கொள்ள மின்சார சபை திட்டமிட்டிருந்தது. எனினும், 3750 கிகாவாட் நீர் மின் உற்பத்தியையே இவ்வாண்டு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்ததாக அவர் கூறினார்.இதற்கமைய, அனல் மின் நிலையங்களில் இருந்து 750 கிகாவாட் மின் உற்பத்தி திறனை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும், அதற்காக அதிக நிதியை செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலைமைய கருத்தில் கொண்டு, மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் கூடுதல் தொகையை ஈடுசெய்யும் வகையில் இந்த கோரிக்கை நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்டதாக கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பான விரிவான தகவல்கள் எதிர்வரும் திங்கட்கிழமை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இதற்கமைய, மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மூன்றாவது மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்கள் தமது கருத்துக்களையும் யோசனைகளையும் எழுத்துமூலமாக எதிர்வரும் 18 ஆம் திகதி வரை முன்வைக்க முடியும்.

இந்த விடயம் தொடர்பான எழுத்துமூலமான கருத்துகளை, மின்னஞ்சல், Fax, Facebook அல்லது கடிதம் ஊடாக முன்வைக்க முடியும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், வாய்மூல கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஒக்டோபர் 18 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *