இலங்கை புகையிரத சேவையின் மாஹோ முதல் அநுராதபுரம் வரையிலான (66 கிமீ) ரயில் பாதையின் சமிக்கை தொகுதியினை வடிவமைத்தல், பொருத்துதல், பரிசோதித்தல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைசர் பந்துல குணவர்த்தன மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் முன்னிலையில் கைசாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் ஆகியவற்றுக்கிடையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 318 மில்லியன் டொலர் இந்திய கடனுதவித்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 14.90 மில்லியன் டொலர் நிதி உதவியின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை வலுவாக்குதல், நாட்டின் பொருளாதர மீட்சியினை துரிதப்படுத்துதல், இலங்கை மக்களின் போக்குவரத்தினை இலகுவாக்குதல் ஆகியவற்றில் இந்த சமிக்கைத் தொகுதியின் முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், தற்போதைய சூழலில் இந்த திட்டத்திற்கான கடனுதவியானது, இலங்கை மக்களுடன் இந்திய அரசாங்கமும் மக்களும் துணை நிற்பதற்கான தொடர்ச்சியான விருப்பத்தை அடையாளப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன உரையாற்றிய போது, கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு பல வழிகளில் ஆதரவளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார். மேலும், இலங்கையின் புகையிரத சேவை மேம்பாட்டு திட்டங்களுக்கு அண்மைக்காலமாக இந்தியாவில் இருந்து மட்டுமே கடனுதவி அடிப்படையில் ஆதரவு கிடைத்துள்ளது என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதுவரை வழங்கப்பட்ட ஐந்து கடனுதவி திட்டங்களில் 1 பில்லியன் டொலர் பெறுமதியான திட்டங்கள் புகையிரத துறையில் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்துடன், 2009 மார்ச்சில் தனது செயற்பாடுகளை இலங்கையில் ஆரம்பித்திருந்த இந்திய ரயில்வே நிறுவனம் இந்திய உதவியின் கீழ் இலங்கையில் பல்வேறு வகையான திட்டங்களை நிறைவேற்றியுள்ளதுடன், இலங்கையின் புகையிரத சேவைகள் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல், திறன்விருத்தி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது, அந்நிறுவனம், மாஹோவிலிருந்து ஓமந்தை வரையிலான (128 கிமீ) ரயில்பாதையின் புனரமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்தி பணிகள் உட்பட ரயில் பாதையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை 91.27 மில்லியன் டொலர் செலவில் மேற்கொள்கின்றது. இத்திட்டத்தின் கீழ், அனுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையான ரயில்பாதை புனரமைப்பு பணிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரத்திலிருந்து மாஹோ வரையிலான புனரமைப்பு பணிகள் 2024 ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

