மயாமி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜெஸ்ஸிகா

அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, உள்ளூர் நட்சத்திரம் ஜெஸ்ஸிகா பெகுலா தகுதி பெற்றார். காலிறுதியில் அனஸ்டேசியா போதபோவாவுடன் மோதிய ஜெஸ்ஸிகா 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடிய ஜெஸ்ஸிகா 6-3 என 2வது செட்டை கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட்டில் அனல் பறந்தது. இரு வீராங்கனைகளும் தங்கள் சர்வீஸ் ஆட்டத்தை தக்கவைத்து புள்ளிகளைக் குவிக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது.

அதில் சிறப்பாக செயல்பட்ட ஜெஸ்ஸிகா 4-6, 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் 2 மணி, 36 நிமிடம் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.  மற்றொரு காலிறுதியில் இத்தாலி வீராங்கனை மார்டினா டிரெவிசானை எதிர்கொண்ட எலனா ரைபாகினா (கஜகிஸ்தான்) அதிரடியாக விளையாடி 6-3, 6-0 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றியை வசப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 1 மணி, 9 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. அரையிறுதியில் ஜெஸ்ஸிகா – ரைபாகினா மோத உள்ளனர். அல்கரஸ் முன்னேற்றம்: மயாமி ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் களமிறங்கிய நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கரஸ் (ஸ்பெயின்) 6-4, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் டாமி பவுலை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். ரஷ்யாவின் மெத்வதேவ், கரென் கச்சனோவ், இத்தாலி வீரர் யானிக் சின்னர், அமெரிக்க வீரர்கள் டெய்லர் பிரிட்ஸ், கிறிஸ்டோபர் யூபேங்க்ஸ் ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *