கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விட அதிக உஷ்ணம் எதிர்பாரக்கப்படுவதாகவும், இந்த நிலைமை எதிர்வரும் சில மாதங்களுக்கு தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, புத்தளம், குருநாகல், அம்பாந்தோட்டை,அநுராதபுரம், பொலன்னறுவை, மற்றும் திருகோணமலை ஆகிய 8 மாவட்டஙகளுக்கே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மனித உடலால் தாங்கிக் கொள்ளக்கூடிய வெப்பத்தை விட அதிக உஷ்ணம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை பிரிவுக்கான பிரதிப்பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மேலும், நாடளாவிய ரீதியில் காற்றின் அளவு குறைந்துள்ளமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வெப்பநிலை மேலும் சில மாதங்களுக்கு தொடரும். அதிக வெப்பத்திலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களையும் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கமைவாக அதிகளவு நீரை அருந்துதல், அதிக சோர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடாதிருத்தல், வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிதல் மற்றும் நிழலான இடங்களில் தங்கியிருத்தல் போன்ற அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வெப்பமான காலநிலை காரணமாக எமது உடலில் இருந்து அதிகளவிலான வியர்வை வெளியேறுவதால் கலைப்பு ஏற்படலாம் எனவும் இதனை தவிர்த்துக்கொள்ள நீர், இளநீர் மற்றும் கஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வெப்பமான காலநிலை காரணமாக எமது உடலில் இருந்து அதிகளவிலான வியர்வை வெளியேறும். இதன்போது வியர்வையுடன் நீர் மற்றும் உப்பும் வெளியேறுகிறது. இதன்போது எமக்கு கலைப்பு ஏற்படலாம். அதோடு சோடியம் குறைபாடும் ஏற்படுகிறது.இதனால் மயக்கம் ஏற்படலாம். உடல் வலி, தலைவலி, வாந்தி, நித்திரை மயக்கம், நித்திரை இன்மை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே இதனை தவிர்த்துக் கொள்ள நீர், இளநீர், கஞ்சி மற்றும் ஜீவனி எடுத்துக்கொள்ளலாம்.
மேலும், தோல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே சிறுவர்களை காலை மற்றும் மாலை வேளைகளில் நீரில் நனைக்க வேண்டும் என்றார்.

