போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் அவசியம் – மைத்திரி

நாட்டில் போதைப்பொருள் பாவனையால் மாணவர்கள் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. உயர்தர வகுப்பில் படிக்கும் பெண் பிள்ளைகள் கூட இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். போதைப்பொருள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியது அத்தியாவசியமானது என  பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உற்பத்தி (விசேட ஏற்பாடுகள்) வர்த்தமானியின் கட்டளைகள் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் போதைப்பொருள் வியாபாரம், பாவனை தீவிரமடைந்துள்ளது. ஐஸ், ஹீரோயின், கொக்கெயின், சிகரெட் மற்றும் சாராயம் ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகள் மிகவும் பாரதூரமானது. பாடசாலை மாணவர்களும் சீரழிந்துள்ளனர். உயர்தர வகுப்பு பெண் பிள்ளைகளும் தற்போது இவ்வாறான போதைப்பொருள்  பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்.

போதைப்பொருள் பாவனைக்கு மாணவர்கள் அடிடையாகியுள்ளார்கள்.போதைப்பொருள் இல்லாமல் இருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஆகவே

தற்போதைய பாரதூர தன்மையை அறிந்து போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் இன்னும் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று கோருகின்றேன்.

இதேவேளை போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு  அமைச்சர்  கூறுகின்றார்.எனக்கும் இவ்வாறான அச்சுறுத்தல் இருந்தது.போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்னை கொலை செய்ய பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தனர். நான் மரண தண்டனையை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுத்தேன். அது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. இந்நிலையில் பாடசாலை மாணவர்களை இதில் இருந்து பாதுகாப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோருகின்றேன்.

அத்துடன் மோட்டார் வாகனங்களுக்கு வரி அதிகரிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் அதி சொகுசு வாகனங்கள் இறக்குமதி தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதை 4 ,5 வருடங்களுக்கு நிறுத்த வேண்டும். சொகுசு வாகனங்கள் இங்கே அவசியமில்லை. இதற்காக செலவாகும் அந்நிய செலாவணி அதிகமாகும். இதனால் இதன் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும்.

இதேவேளை உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் அதில் போட்டியிடும் அரச ஊழியர்கள் உள்ளிட்டோர் சம்பள பிரச்சினைகளில் சிக்கியுள்ளனர். எதிர்வரும் மாதங்களில் தற்கொலைகளும் இடம்பெறலாம். இதனால் தேர்தலில் போட்டியிடும் அரச அதிகாரிகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *