பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கிடையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தை பகிர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன , அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக உள்ளிட்டோரும் , கூட்டமைப்பு தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் , செல்வம் அடைக்கலநாதன் , இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் உலகின் ஏனைய நாடுகளை உதாரணமாகக் காண்பித்து அதிகாரப்பகிர்வின் முக்கியத்துவம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்தோடு தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. எனினும் பொலிஸ் அதிகாரங்களைப் பகிராமல் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறை குறித்து இதன் போது அமைச்சரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட அதிகாரப் பகிர்வு மிகவும் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய கூட்டமைப்பு எம்.பி.க்கள், அங்கு பயன்படுத்தப்பட்ட முறைகளை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த முடியும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கிடையிலான அரசியல் கலாசாரம் முற்றிலும் வேறுபட்டதாகும் என்று அமைச்சர் டிரான் அலஸ் இதன் போது தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை என்ன என்று அமைச்சர் இதன் போது கேள்வியெழுப்பியுள்ளார்.
மாவட்டக் குழுக்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நீண்ட தூரம் சென்று கொழும்பு வர வேண்டியிருப்பதாலும், ஆளுநர்கள் சிலரது தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அமைச்சரின் இந்தக் கேள்விக்கு பதிலளித்துள்ளனர்.
மேலும், பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பான உத்தேச விடயங்களில் புதிதாக எதுவும் சேர்க்கப்படவில்லை எனவும், ஆனால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மேலதிகமாக மாகாண பொலிஸ் ஆணைக்குழுவையும் நியமிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வடமாகாணம் முழுவதும் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும், பெரும்பாலான இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவதாகவும் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

