வலிந்து காணாமலாக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகச் சட்டம் உள்ளிட்ட 6 சட்ட ஏற்பாடுகளை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளமையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வரவேற்றுள்ளது.
எனினும் யுத்தத்தின் போதான மனிதப்படுகொலைகள், பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உட்பட கடந்தகால மனித உரிமை மீறல்கள் அனைத்திற்குமான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை உள்ளிட்ட 6 நாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் மீளாய்வு கூட்டத் தொடர் கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 24ஆம் திகதி வரை இடம்பெற்றது.
மனித உரிமைகள் குழுவின் மீளாய்வு கூட்டத்தொடர் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாக பயங்கரவாதத்தின் வரையறையை சுருக்கி, உடன்படிக்கை , சட்ட உறுதிப்பாடு, முன்கணிப்பு மற்றும் விகிதாச்சாரக் கொள்கைகளுக்கு இணங்கக்கூடிய சட்டத்தை கொண்டு வர இலங்கையை வலியுறுத்துகின்றோம்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு அல்லது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இயற்றுவதற்கான சட்டமியற்றும் செயல்முறையில் மனித உரிமைகள் ஆணைக்குழு , பொது மக்கள் மற்றும் சிவில் சமூகம் உட்பட பலதரப்பட்ட பங்குதாரர்களின் வெளிப்படையானதும் , சுதந்திரமானதும் , அர்த்தமுள்ளதுமான பங்கேற்பை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும்.
அத்தோடு 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமல் போனோர் தொடர்பான அலுவலகச் சட்டம் , 2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல்கள் (திருத்தங்கள்) சட்டம் , 2017 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு உதவுதல் மற்றும் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம்உள்ளிட்டவற்றை இலங்கை ஏற்றுக்கொண்டதை மனித உரிமைகள் குழு வரவேற்கிறது.
இதே போன்று 2018 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க வலிந்து காணாமலாக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனம், 2022ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நில மேம்பாட்டு (திருத்தம்) உள்ளிட்டவற்றையும் இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

