வடகொரியா வித்தியாசமான உத்தரவுகளுக்கு பெயர் பெற்ற நாடு. தீவிரமான கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் நாடான அங்கு ஊடகங்களின் செய்திகூட அரசின் தணிக்கைக்குப் பின்புதான் வெளியாகும். அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தையும் முன்னாள் அதிபருமான 2-ம் கிம் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்தார். அவர் உயிரிழந்த 2 நாட்களுக்குப் பின்புதான் அந்த செய்தி வெளியுலகிற்கே தெரிந்தது. ஆதலால் வடகொரியாவிலிருந்து எளிதாக எந்த செய்தியும் கசிந்துவிடாது.
மேலும் அங்கு அரசுக்கு எதிரான நடவடிக்கைகளைல் ஈடுபடும் மக்களுக்கு மரண தண்டனைகளும் அவ்வப்போது வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மத சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக இருக்கும் அந்நாட்டில் அதற்கு எதிராக தண்டனைகளும் வழங்கப்படுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பைபிள் வைத்திருந்த 2 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதுதான் தற்போதைய லேட்டஸ்ட் செய்தி. சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. அதில், “வட கொரியாவில் 70,000 கிறிஸ்தவர்கள் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்கு அனுப்பப்பட்ட பலரில் இரண்டு வயது சிறுவனும் அடக்கம்.
கிறிஸ்தவ மதப் பழக்கவழக்கங்களை கடைபிடித்தற்காகவும், பைபிளை வைத்திருந்ததற்காகவும் அந்தக் குடும்பம் கைது செய்யப்பட்டது. அதில் இரண்டு வயது குழந்தை உட்பட ஒட்டுமொத்த அந்த குடும்பமும் 2009 முதல் ஆயுள் தண்டனை பெற்று அரசியல் சிறை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் மிக மோசமான நிலைமையில் இருப்பதாகவும், அவர்கள் பல்வேறு வகையான உடல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

