சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவரால் இலங்கை கடற்பரப்பிற்குள் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால் நாட்டின் சமுத்திர பரப்பிற்கு ஏற்பட்ட மாசுக்கான இழப்பீட்டினைப் பெற்றுக் கொள்வதற்காக வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்கும் போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் அரசாங்கத்தின் உயர் சட்டத்தரணி ஆகியோர் தமக்கான தனிப்பட்ட இலாப நோக்கத்திற்காக செயற்பட்டுள்ளதாக குறித்த நபர் காணொளிப் பதிவொன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் உயர் அதிகாரிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டும் வகையிலும் , அரச உத்தியோகத்தர்கள் என்ற ரீதியில் முன்னெடுக்கும் சட்ட ரீதியான செயற்பாடுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான போலியான குற்றச்சாட்டுக்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்வைத்துள்ள தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசங்கத்தின் உயர் அதிகாரிகள் இருவரால் இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

