கண் சத்திரசிகிச்சையின் பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் A.R.M. தௌபிக் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கண் வில்லை பொருத்தும் சத்திரசிகிச்சைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கண் சத்திரசிகிச்சையின் பின்னர் 34 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கொஸ்கொட – பொரலுகெட்டிய பகுதியை சேர்ந்த 34 வயதான ஹிமாலி வீரசிங்ஹ எனும் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்தார்.
கொழும்பு கண் வைத்தியசாலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கண் வில்லையை பொருத்துவதற்கான சத்திரசிகிச்சையொன்றுக்கு அவர் உட்படுத்தப்பட்டிருந்தார்.
அவர் வைத்தியசாலை கிளினிக்கிற்கு மீண்டும் சென்ற சந்தர்ப்பத்தில், கண் வில்லை முறையாக பொருந்தவில்லை எனவும், இதன் காரணமாக உடனடியாக மீண்டும் சத்திரசிகிச்சையொன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதி குறித்த சத்திரசிகிச்சை மீண்டும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெண் உயிரிழந்துள்ளதாக குடும்ப உறவினர்கள் கூறினர்.

