தொழிலதிபரான திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம மக்கள் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஸ தமது ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த கோட்டாபய ராஜபக்ஸ, தனக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர் தலைமையிலான புதிய அரசியல் கட்சியின் மூலம் இழந்த தனது நன்மதிப்பை மீண்டும் கட்டியெழுப்பவும் பலப்படுத்தவும் தயாராகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தாலும், முன்னாள் ஜனாதிபதிக்கான சகல சலுகைகளையும் வசதிகளையும் பெற்றுக்கொள்ளும் கோட்டாபய ராஜபக்ஸ, அண்மையில் தொழிலதிபர் திலித் ஜயவீரவினால் வாங்கப்பட்ட மவ்பிம மக்கள் கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஜயவீர, மவ்பிம மக்கள் கட்சியை பொறுப்பேற்ற பின்னர், கட்சியின் யாப்பு மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸவின் வியத்மக அமைப்பிற்கு இணையாக புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைத்துக்கொள்வதுடன், கல்விமான்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

