கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (07) காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
செபஸ்தியார் வீதி என அழைக்கப்படும் குறித்த வீதி ஊடாக நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.
இரணைமடு பொதுச்சந்தை, பாடசாலை மற்றும் தொழில் உள்ளிட்ட அன்றாட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கு குறித்த வீதி இன்றியமையாததாக உள்ளது.
இந்நிலையில், குறித்த பாலம் 2019ம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையினால் அமைக்கப்பட்டதுடன், அதன் பாதுகாப்பிற்கான பணிகள் 2022 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்காக ஏறத்தாழ 11 இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஆயினும், நேற்றைய தினம் அதிகாலை உடைந்து விழுந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பாலம் உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது இடம்பெற்ற இந்த சம்பவம், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் பயணிக்கும் போது இடம் பெற்றிருந்தால், பாரிய ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கும் என மக்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

