பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

பிக்கு ஒருவரின் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (19) காலை உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெனியாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

பல்லேகமவில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த வந்த 18 வயதுடைய பிக்குவால் கடந்த 16ஆம் திகதி பிற்பகல் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில், பொலிஸ் கான்ஸ்டபிள் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டார்.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் உடகோமடிய, கட்டுவன பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான உத்தியோகத்தர் என்பதுடன், இவர் சுமார் 20 வயதுடைய பிக்குவின் சகோதரியுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த காதல் உறவை நிறுத்துமாறு பிக்குவால் பல தடவைகள் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அறிவித்திருந்த போதிலும், கடந்த 16ஆம் திகதி குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உறவைப் பேணி வந்த பிக்குவின் சகோதரியின் வீட்டுக்குச் சென்ற போது, பிக்கு குறித்த உத்தியோகத்தருக்கு தொலைபேசி மூலம் அழைத்து தன்னை சந்திக்குமாறு அறிவித்திருந்தார்.

பின்னர் பல்லேகம கங்கொட வீதியில் உள்ள சம்போதி முதியோர் இல்லத்திற்கு அருகில் இருவரும் சந்தித்துள்ளனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து சந்தேக நபரான பிக்கு,  தனது பையில் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தில் சரமாரியாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலை நடத்திய சந்தேக நபர் தெனியாய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மொரவக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *