பங்களாதேஷுக்கு 50 மில்லியன் டொலரை மீள செலுத்திய இலங்கை

பங்களாதேஷினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி பரிமாற்ற வசதியில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை மீள செலுத்தியுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முதல் தவணைக் கொடுப்பனவாக கடந்த 17 ஆம் திகதி குறித்த நிதி மீள செலுத்தப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஊடகப் பேச்சாளர் மெஸ்பவுல் ஹக்கை (Mezbaul Haque) மேற்கோள் காட்டி பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

இதன் காரணமாக தமது நாட்டின் அந்நிய செலாவணியின் கையிருப்பு உயர்வடைந்துள்ளதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

குறித்த நிதி பரிமாற்ற வசதியின் இரண்டாம் தவணை கொடுப்பனவும் இந்த மாதத்திற்குள்ளேயே செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனினும் இரண்டாம் தவணைக் கொடுப்பனவின் பெறுமதி தொடர்பில் கருத்து தெரிவிக்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

நிதி பரிமாற்ற வசதி எனப்படும் SWAP வசதியினூடாக பங்களாதேஷ் மத்திய வங்கியினால், இலங்கை மத்திய வங்கிக்கு 2021 ஆம் ஆண்டு மே மாதம் குறித்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டது. 

இலங்கை முகங்கொடுத்த பொருளாதார பொருளாதார நெருக்கடியினால் இந்த நிதியை மீளச் செலுத்தும் நடவடிக்கை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பிற்போடப்பட்டது. 

இந்த நிதியை மீளச் செலுத்துவதற்கு பங்களாதேஷ் மத்திய வங்கியின் பணிப்பாளர் சபையினால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *