மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை கொழும்பில் ‘நாம் 200’ எனும் தொனிப்பொருளில் தேசிய நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்திய வம்சாவளியான மலையக மக்களுக்கு 200 ஆண்டுகள் கடந்தும் கிடைக்கப் பெறாமலுள்ள உரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் இலங்கைக்கு மாத்திரமின்றி சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்தன, இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட முக்கிய இராஜதந்திரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இன்று மாலை 4 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும். அது மாத்திரமின்றி அவர் இதன் போது விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளார்.
நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினரால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய தேசிய காங்ரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஷஷி தாரூர், மலேசிய இந்திய காங்ரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகன் சரவணன், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழக அமைச்சரவையின் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்தித்துறைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொன் ஜயசீலன், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கே.அண்ணாமலை ஆகியோருக்கும் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு மேலும் சில முக்கிய இந்திய தலைவர்களின் காணொளியூடான பங்கேற்புடன் இலலங்கையில் நிறைவு செய்யப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களும் திறந்து வைக்கப்படவுள்ளன. இந்திய தலைவர்கள் மாத்திரமின்றி இலங்கையிலுள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமம் வழங்கும் பிரச்சினை நீண்ட காலமாக பேசுபொருளாகக் காணப்படும் நிலையில், இந்த தேசிய நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அது தொடர்பில் முக்கிய அறிவிப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

