நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தொகை தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை முன்வைத்துள்ள மாற்று முன்மொழிவுகள் தொடர்பில் வாஷிங்டனிலுள்ள தலைமை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்களின் மதிப்பீடுகளைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட கடன் தொகை தொடர்பில் அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மரணத்தின் விளிம்பில் இருந்த பொருளாதாரத்தை சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் ஊடாகவே சுவாசிக்கும் மட்டத்துக்கு கொண்டு வர முடிந்துள்ளது. இதன் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் தாம் திருப்தியடைய முடியவில்லை என நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அதில், அவர்கள் பிரதானமாகக் குறிப்பிட்டுள்ள விடயம் அரச வருமானம் அதிகரிக்கப்படாமையாகும். இரண்டாவது அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை போதுமானதல்ல என்றும், மூன்றாவதாக ஊழல், மோசடிகளை தவிர்ப்பதற்காக சட்ட மூலம் முன்வைக்கப்பட்ட போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படாமை என்பவற்றைக் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் முன்னெடுத்த மீளாய்வு தொடர்பில் வாஷிங்டனிலுள்ள தலைமை அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியதன் பின்னரே இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும். பலரும் எண்ணுவதைப் போன்று இது சாதாரண விடயமல்ல. 2022இல் வரிகளை அதிகரித்ததன் பின்னர் 1751 பில்லியன் ரூபா வருமானத்தை மாத்திரமே ஈட்ட முடிந்தது. அதில் 1265 பில்லியன் ரூபா அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும், ஓய்வூதியத்துக்கும் செலவிடப்பட்டது.

உலகில் எந்தவொரு நாடும் வரி வருமானத்தில் நான்கில் மூன்று பங்கினை அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்துக்காக செலவிடுவதில்லை. சமூர்த்தி உள்ளிட்ட கொடுப்பனவுகளுக்காக 25 சதவீதம் அரச வரி வருமானத்தில் செலவிடப்படுகிறது. இந்த செலவுகளை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது தொடர்பில் மாற்று முன்மொழிவுகளை முன்வைத்திருக்கின்றோம்.

அத்தோடு, அந்நிய செலாவணி இருப்பை அதிகரிப்பதற்கும், ஊழல் ஒழிப்பு சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *