அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் தற்போதும் உறுதியாகவுள்ளோம். எனினும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் போது , அது தென்னிலங்கையில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது தொடர்பில் சிந்தித்து மிக அவதானத்துடன் தீர்மானிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இந்த கொள்கை ரீதியான நிலைப்பாட்டுடன் இன்றைய சர்வகட்சி மாநாட்டில் சுதந்திர கட்சி பங்கேற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள சு.க. தலைமையத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது எதிர்கால அரசியலை நோக்கமாகக் கொண்டு பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார். அதன் ஒரு அங்கமாகவே சர்வகட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இதன் ஒரு விளைவாக தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முழுமையாக இந்தியாவுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளன.
இதன் காரணமாகவே இந்திய விஜயத்தை நிறைவு செய்த உடனேயே 13ஐ நடைமுறைப்படுத்தல் அல்லது 13க்கு அப்பால் சென்று அதிகாரப்பகிர்வினை வழங்கலுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தள்ளப்பட்டுள்ளார். உத்தேச ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த முயற்சிகளில் ஜனாதிபதி ஈடுபடுகின்றார்.
13 முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சுதந்திர கட்சி உறுதியாகவுள்ளது. எனினும் இவ்விடயத்தில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்துகின்றோம். காரணம் இது தென்னிலங்கை சிங்கள மக்களை பாரியளவில் பாதிப்புக்கு உள்ளாக்கும்.
எனவே தமிழ் மக்களுடனான சிறந்த உறவுகளையும் பாதுகாத்துக் கொண்டு , அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் உணர்வு பூர்வமாக செயற்படும் கட்சி என்ற ரீதியில் சு.க. செயற்படுகின்றது. இந்த கொள்கை ரீதியான நிலைப்பாட்டுடன் சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ள நாம் தீர்மானித்துள்ளோம் என்றார்.

