உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் திவ்யா சுப்பராஜு, சரப்ஜோத் சிங் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
அஜர்பைஜானின் பாகு நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் திவ்யா சுப்பராஜு, சரப்ஜோத் சிங் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது. தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய ஜோடி, செர்பியாவின் ஜோரானா அருனோவிக், டாமிர் மைக் ஜோடியை எதிர்கொண்டது. இதில் திவ்யா சுப்பராஜு, சரப்ஜோத் சிங் ஜோடி 16 புள்ளிகளை குவித்து அசத்தியது. செர்பியா ஜோடியால் 14 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது.
துருக்கியைச் சேர்ந்த சிமல் யில்மாஸ், இஸ்மாயில் கெலஸ் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த ஜோடி 17-9 என்ற புள்ளிகள் கணக்கில் இத்தாலியின் சாரா கோஸ்டான்டினோ, பாலோ மோனா ஜோடியை தோற்கடித்தது. இந்த தொடரில் இதுவரை இந்தியா 2 பதக்கங்கள் வென்றுள்ளது. நேற்று முன்தினம் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரிதம் சங்க்வான் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

