ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை மதியம் 1.30க்கு இந்தியா செல்லவுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இது அமைந்துள்ளது.
தனது டெல்லி விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்தோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தை மையப்படுத்தி 5 முக்கிய ஒப்பந்தங்களும் கைசாத்திடப்படவுள்ளன.
புதுப்பிக்கதக்க ஆற்றல் சக்தி , இரு நாடுகளுக்கு இடையில் கடலூடான எரிபொருள் குழாய் மற்றும் மின்சார கேபில் இணைப்புகளை ஏற்படுத்தல், திருகோணமலையில் பொருளாதார வலயம் , மருந்து பொருட்களை நேரடியாக கொள்வனவு செய்தல், பால் உற்பத்தி ஆகியவை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களே இவ்வாறு கைச்சாத்திடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

