ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான தயார்ப்படுத்தல்களை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
களனி பல்கலைக்கழகத்துக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோரை பார்வையிடுவதற்காக நேற்று வெள்ளிக்கிழமை றாகம வைத்தியசாலைக்கு சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மோல்டோவா, ஐவரிக் கோஸ்ட் உள்ளிட்ட 10 நாடுகள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கள் இன்றி சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளன. இந்த அரசாங்கமே இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளது.
மக்களிடமிருந்து உண்மையான தகவல்கள் மறைக்கப்பட்டே நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டிலுள்ள 90 சதவீதமான மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே வரிசைகள் இல்லாமல் போயுள்ளன.
மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் அரசாங்கத்துக்கு பதிலாக , மக்களை வாழ வைக்கும் அரசாங்கமே எமக்கு தேவையாகும். தேர்தலையும் , தேர்தலுக்கான வரைபடத்தையும் இந்த அரசாங்கம் அழித்துள்ளது. எவ்வாறிருப்பினும் நீண்ட காலத்துக்கு இவ்வாறு பயணிக்க முடியாது.
எமது கோரிக்கைக்கு ஏற்ப தயார்ப்படுத்தல்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே எந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் நடத்தப்பட்டாலும் , அதனை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம். கட்சியிலிருந்து செல்பவர்கள் செல்லலாம் , இணைபவர்கள் இணையலாம். ஆனால் எம்முடன் இணைபவர்களை கொள்கை அடிப்படையிலேயே நாம் இணைத்துக் கொள்வோம் என்றார்.

