“ஜனநாயகத்தின் கேலிக்கூத்து” – குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்காததற்கு இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. அதை திறந்து வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார். அதன்படி, வரும் 28-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்த விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், நாட்டின் முதல் குடிமகள் என்ற முறையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முதான் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க் கொடி தூக்கி உள்ளன.

இந்த நிலையில் ஜனநாயகத்தின் கேலிக்கூத்து என்ற தலைப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படாத செய்தி மற்றும் தமிழகத்தின் விழுப்புரத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்களை உள்ளே அனுமதிக்க கூடாது என்று கூறி சிலர் போராட்டத்தில் ஈடுபட்ட செய்தியையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

மேலும் அந்த பதிவில் இயக்குநர் பா.ரஞ்சித் கூறியிருப்பதாவது:

கட்சி பேதமின்றி, தேசத்தின் முதல் குடிமகள் மற்றும் சாமானிய மக்கள் சாதியால் நிறைந்த இந்திய சமூகமாகவே நீடித்திருப்பது அவலம். ஏனெனில், அவர்கள் அனைவரும் சடங்குகள் மற்றும் கலாச்சாரம் மூலம் இந்து சமூக ஒழுங்கை நிலைநிறுத்துகிறார்கள்.

கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை கருத்தில் கொள்ளாமல் பல கட்சிகளும், அரசாங்கங்களும் வந்து சென்றுள்ளன, அவை அனைத்தும் கலாச்சார தூய்மையைப் பாதுகாக்கவே பாடுபட்டன. மேலும் ஏற்கெனவே இருக்கும் சடங்குகளின் வடிவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்காமல், தொடர்ந்து தீண்டாமை, சாதிப் பாகுபாடு மற்றும் சாதியின் பெயரால் புதிய வடிவங்களைத் தொடர்ந்து உருவாக்குகின்றன.

பிஜேபியின் தொடர் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மற்றும் ஆட்சிக்கு எதிராக கடும் கண்டனங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *