சூடான் உள்நாட்டு போரில் பலியானோர் எண்ணிக்கை 528 ஆக உயர்வு

ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவ ஆட்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு இராணுவத்தின் ஒரு பிரிவான துணை இராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் இடம்பெற்றது.

இந்நிலையில் கடந்த மாதம் 15ஆம் திகதி தலைநகர் கார்டூமில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையம் போன்றவற்றை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக துணை இராணுவம் அறிவித்தது. இதனையடுத்து இந்த மோதல் உள்நாட்டு போராக உருவெடுத்தது.

இந்த உள்நாட்டு போர் காரணமாக சூடானில் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டவர்கள் உள்பட பலர் கொல்லப்பட்ட்டுள்ளனர். எனவே இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதனையேற்று இரு தரப்பினரும் தற்காலிகமாக போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.

இந்த நிலைமையை சாதகமாகக் கொண்டு பல நாடுகள் தங்களது நாட்டின் தூதரக அதிகாரிகள், பொதுமக்களை விமானங்கள் மூலம் பத்திரமாக தாயகம் திரும்ப ஏற்பாடு செய்துள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

ஆனால் 3 வாரங்களுக்கும் மேல் இடம்பெற்று வரும் உள்நாட்டு போரால் தற்போது அங்கு பலியானோரின் எண்ணிக்கை 528 ஆக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் 4500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தலைநகர் கார்டூம் மற்றும் மேற்கு டார்பூர் தவிர பெரும்பாலான மாகாணங்களில் போர் நிறுத்த நடவடிக்கையானது தற்போது அமைதியை கொண்டு வந்துள்ளதாகவும், பொதுமக்களுக்கான சுகாதார சேவைகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *