சுயாதீன சர்வதேச விசாரணைகளின் ஊடாக உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படுவர் – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் எமது அரசாங்கத்தில் சுயாதீன தேசிய விசாரணைகளுக்கு அப்பால் சுயாதீன சர்வதேச விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் , விசேட அறிவிப்பொன்றை விடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் இன்னும் நியாயம் வழங்கப்படவில்லை? இந்த தாக்குதல்களின பின்னணியில் இரகசிய நிகழ்ச்சி நிரல் காணப்பட்டது என்றால் , அதனை மறைப்பதற்கு எவரேனும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதில் உண்மையைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை ஏன் எவராலும் முறையாக எடுக்க முடியாதுள்ளது?

இவ்விவகாரத்தில் உண்மைகளைக் கண்டறிவதில் பல்வேறு தலையீடுகள் காணப்படுகின்றன. எமது அரசாங்கத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். சுயாதீன தேசிய விசாரணைகளுக்கு மேலதிகமாக சுயாதீன சர்வதேச விசாரணைகளும் முன்னெடுக்கப்படும்.

எப்.பி.ஐ. , ஸ்கொட்லன்யாட் உள்ளிட்டவற்றுடன் இணைந்து சர்வதேச மட்டத்தில் கூட்டு விசாரணைகள் நடத்தப்படும். இதனுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் நாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. விசாரணைகள் தொடர்பில் முன்வைக்கப்படும் முரண்பட்ட கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக இல்லை.

பேராயர் உள்ளிட்ட சகல கத்தோலிக்க மக்களிடமும் எமது அரசாங்கத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்று ஊறுதியளிக்கின்றோம். காலங்கள் செல்லும் போது இவ்விவகாரத்தையும் மறந்து செல்ல இடமளிக்கக் கூடாது. இந்த மோசமான தாக்குதல்களை மேற்கொண்ட அனைவருக்கும் உச்ச பட்ச தண்டனை எமது அரசாங்கத்தில் வழங்கப்படும் என்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *