சுதீப்புக்கு மிரட்டல் கடிதம் – இயக்குநர் ரமேஷ் கிட்டி கைது

பிரபல கன்னட நடிகர் சுதீப். இவர் தமிழில், ‘நான் ஈ’, ‘முடிஞ்சா இவனபுடி’, ‘புலி’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தியிலும் நடித்து வரும் அவர், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் இருக்கும் சுதீப் வீட்டுக்கு கடந்த மாதம் மிரட்டல் கடிதங்கள் வந்தன. அதில் நடிகர் சுதீப்பின் அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்திருந்தனர்.

மேலும் சுதீப்பை தகாத வார்த்தையில் திட்டியும் இருந்தனர். அதனை அவர் கண்டுகொள்ளவில்லை. பிறகு, மீண்டும் மிரட்டல் கடிதம் வந்திருந்தது. இதுகுறித்து சுதீப் சார்பில் ஜாக் மஞ்சு என்பவர் புட்டேனஹள்ளி போலீஸில் புகார் செய்தார். அவர்கள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சுதீப்புக்கு நெருக்கமான இயக்குநர் ரமேஷ் கிட்டி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். நடிகர் சுதீப்பின் அறக்கட்டளைத் தலைவராக ரமேஷ் கிட்டி இருந்தார். அதன் நிதியை கையாள்வதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *