இந்திய மத்திய அரசின் சிஐஐ தக்ஷின் மாநாட்டில் ‘யூத் ஐகான்’ விருதை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த விருதினை வழங்கினார்.
தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் நேரடியாக நடித்து வருபவர் நடிகர் தனுஷ். தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். தான் சார்ந்துள்ள திரைத்துறையில் நடிகர் என்ற வட்டத்தோடு மட்டும் நின்றுவிடாமல் பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என இயங்கி வருகிறார் தனுஷ். இந்தச் சூழலில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுள்ளது.
“40 வயதில் ‘யூத் ஐகான்’ விருதை பெறுவேன் என எண்ணவில்லை. இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது என்பதை நினைவூட்டும் விதமாக இது உள்ளது. எனது உருவத்தை தொடக்கத்தில் சினிமா ஏற்றுக் கொள்ளவில்லை. கனவு கண்டேன். இப்போது இங்கு நிற்கிறேன்” என விருதைப் பெற்ற தனுஷ் தெரிவித்துள்ளார்.

