சார்க் ஊடகவியலாளர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் மானிப்பாய் மகளிர் கல்லூரியில் ‘ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்’ கருத்தரங்கு

சார்க் ஊடகவியலாளர்கள் மன்றத்தின் இலங்கைக் கிளையின் ஏற்பாட்டில் யாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியில் ‘ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு கடந்த 28ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.

சார்க் ஊடக அமைப்பின் இலங்கைக்கான பொருளாலர் வீரகேசரி நாளிதழின் உதவி செய்தி ஆசிரியருமான திரு.எஸ்.லியோ நிரோஷ தர்ஷன் மற்றும் கல்லூரி அதிபர் திருமதி.சூரியராசா , உள்ளிட்டவர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டு கருத்தரங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் ஆரம்ப உரையாற்றிய கல்லூரி அதிபர் திருமதி.சூரியராசா , இன்றைய சமூகத்தில் இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கையற்றிருப்பதால் கல்வியில் சிறந்த நிலையில் காணப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வீதம் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டியதோடு , அதற்கான ஆரம்பமாக அமையும் போதைப்பொருள் பழக்கங்கள் , கூடா நட்பு உள்ளிட்டவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அத்தோடு சார்க் ஊடகவியலாளர் மன்றத்தினால் சமூக நோக்கத்துடன்  போதைப்பொருள் தொடர்பான முதலாவது விழிப்புணர்வு கருத்தரங்கை தமது கல்லூரியிலிருந்து ஆரம்பித்துள்ளமைக்கு நன்றியையும் , வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் உயர்தர மாணவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கில் முக்கிய வளவாளர்களாகக் கலந்து கொண்ட பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மு.உதயசீலன் , ஆரோக்கியமான வாழ்க்கை என்றால் என்பது பற்றியும் , ஆரோக்கியமான வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளையும் , அதற்காக இளம் தலைமுறையினர் எவ்வாறு சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் விளக்கமளித்தார்.

அதே போன்று யாழ்.பல்கலைக்கழக உளவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் வைத்தியருமான திரு.கே.கஜவிந்தன் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் எடுக்கக் கூடிய தீர்மானங்கள் தொடர்பிலும் , அதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். அத்தோடு கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவிகளின் மனநிலையை பரிசோதிப்பதற்கான மாதிரி நடைமுறை மதிப்பீடொன்றும் இதன் போது அவரால் நடத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.

கருத்தரங்களில் கலந்து கொண்ட வீரகேசரி பத்திரிகையின் ஊடகவியலாளர் எம்.மனோசித்ராவினால் இலங்கையில் போதைப்பொருள் பாவனையின் தற்போதைய போக்கு தொடர்பில் தரவுகளுடன் மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதன் போது , தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் 2021ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின் படி , இலங்கையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 110 031 என்றும் , 2020 உடன் ஒப்பிடும் இது போது 13 சதவீத அதிகரிப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 46 சதவீதமானவர்கள் ஹெரோயின் தொடர்பான குற்றங்களுக்காகவும் , 40 சதவீதமானவர்கள் கஞ்சா தொடர்பான குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டுள்ள அதே வேளை , போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்ற விடயமும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய போதைப்பொருள் பாவனையாளரிகளின் வீதம் மேல் மாகாணத்தில்  57 சதவீதமாகவும் , தென் மாகாணத்தில் 12 சதவீதமாகவும் , வடக்கு  மாகாணத்தில் 7 சதவீதமாகவும் , ஏனைய மாகாணங்களில் 24 சதவீதமாகவும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கஞ்சாவுடன் தொடர்புடைய கைதுகள் சற்று குறைவடைந்திருந்தாலும் , ஹெரோயின் தொடர்பான கைதுகள் அதிகரித்த போக்கினையே காண்பிக்கின்றமை தொடர்பிலும் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது.

அது மாத்திரமின்றி கடந்த 5 ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு , குறிப்பாக வட மாகாணத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு , அவற்றின் விலைகள் , போதைப்பொருள் பாவனையால் சமூகத்தில் அதிகரித்துச் செல்லும் குற்றச் செயல்கள் தொடர்பிலும் இதன் போது மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் தொடர்பான தெளிவுபடுத்தலின் போது , ‘போதைப்பொருள் உற்பத்தியில் பிரதானமான நாடாக ஆப்கானிஸ்தான் காணப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரான் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு போதைப்பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுகின்றன. அந்த நாடுகளிலிருந்தே கடல் மார்க்கமாகவும் , வான் மார்க்கமாகவும் இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன.’ என்றும் அவரால் குறிப்பிடப்பட்டது.

இந்நிகழ்வினை வீரசேகரி பத்திரிகையின் யாழ் ஊடகவியலாளர் எம்.  எம்.நியூட்டன் மற்றும் யாழ் புதுமைப்படைப்பாக்கத்தின் இயக்குனரும் ஊடகவியலாளருமான இளங்கீரன் ஆகியோரும் ஒருங்கமைத்திருந்ததோடு, நம்ரட செய்தி இணையம் இந்நிகழ்வுக்கு ஊடக அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *