இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சாவுடனான விவகாரத்து வதந்திகளை அவரது கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான ஷோயிப் மாலிக் மறுத்துள்ளார். தாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளாததற்கு நேரமின்மையே காரணம் எனவும் அவர், தெரிவித்துள்ளார்.
இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இஷான் என்ற மகன் உள்ளார். கடந்த 6 மாதங்களாக சானியா, ஷோயிப் மாலிக் ஜோடியாக பொது வெளியில் தோன்றவில்லை. இதனால் இவர்கள் விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் உலா வந்தன.
இந்நிலையில், கராச்சியில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சியில் ரம்ஜான் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷோயிப் மாலிக், தானும் தனது மனைவியும் எந்தவித விவாகரத்து நடவடிக்கையிலும் இல்லை எனவும் தாங்கள் பிரிந்திருக்கவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஷோயிப் மாலிக் மேலும் கூறும்போது, “ரம்ஜான் பெருநாளை எனது மனைவி மற்றும் மகனுடன் கொண்டாட விரும்பினேன். ஆனால் அவர்கள் வெளியூரில் இருக்கிறார்கள்.
அனைத்து திருமணங்களும் ஏற்றத் தாழ்வுகளை கடந்து செல்கின்றன. ஆனால் அதற்காக உறவு முடிந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை. நானும், சானியாவும் சர்வதேச விளையாட்டுடன் தொடர்பில் இருப்பதால் பிஸியான அட்டவணையை கொண்டுள்ளோம். இதன் காரணமாகவே நாங்கள் ஒன்றாக இருப்பதை பார்க்க முடிவதில்லை. எங்களுக்குள் பிரிவினை மற்றும் கருத்துவேறுபாடுகள் என வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை” என்றார்.

