முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக நேற்று (12) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த மனித புதைக்குழியிலிருந்து மீட்க்கப்பட்ட மனித எச்சங்கள் இறுதி யுத்தத்தில் சரணடைந்ததாக சந்தேகிக்கப்படுபவர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
எவ்வாறிருப்பினும் கொக்குத்தொடுவாயில் அடையாளம் காணப்பட்ட மனித புதைக்குழி அகழ்வு பணிகள் சர்வதேச நியமங்களுக்கு முரணாக இடம்பெற்று வருவதாகவும் எனவே சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச தலையீட்டுடன் குறித்த அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த உடலங்கள் யாருடையது என்பது தொடர்பாக கண்டறியப்பட வேண்டும் எனவும் குறித்த செயற்பாடு சர்வதேச கண்காணிப்புக்கு மத்தியில் இடம் பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


