தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை அருகே தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு முறையான அனுமதி பெறவில்லை எனச் சொல்லி நேற்று நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது முறையான அனுமதி பெற்று அதே இடத்தில் படப்பிடிப்புப் பணிகள் நடைபெறுவதாக தகவல்.
கடந்த சில மாதங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வந்தது. உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்துவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அந்தப் பகுதியில் அதிக சத்தத்துடன் குண்டு வெடிக்கும் காட்சி நேற்று படமாக்கப்பட்டது.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறை அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதால், தென்காசி ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் படப்பிடிப்புக்கு தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று இன்று மீண்டும் அதே இடத்தில் படப்பிடிப்பு தொடங்குவதாக தெரிகிறது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல அமெரிக்க நடிகர் எட்வர்ட் சோனன்பிளிக் (Edward Sonnenblick) இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

