கலைப்பிரிவில் கற்வர்களுக்கு தாதியர் பயிற்சி – ஜனாதிபதியின் விசேட ஆலோசனை

தாதியர் ஆட்சேர்ப்பின்போது கலைப் பிரிவில் கல்வி கற்றாலும் தாதியர் பயிற்சியில் உள்வாங்கக் கூடிய வகையில் விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத்துறை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக 2024 ஆம் ஆண்டு இறுதி வரை வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை 63 வரை நீடிக்கவும், விசேட சந்தர்ப்பங்களில் சுகாதார அமைச்சின் தேவைகளுக்கு ஏற்ப அது குறித்து தேவையான தீர்மானங்களை எடுப்பதற்கும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உப குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டுமெனவும், நாட்டில் உள்ள அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படும் விசேட இணையத்தளம் மூலம் ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உள்ள மருந்துகளின் அளவு மற்றும் நாளாந்தம் பெற்றுக்கொள்ளும் மொத்த மருந்துத் தொகை குறித்த தரவுகளை வழங்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, இந்த வலையமைப்பு செயற்பாட்டின் உடாக வைத்தியசாலைகளுக்கு இடையில் மருந்துகளை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *