பண்டாரவளைப்பகுதியின் கபரகலை பெருந்தோட்டப்பிரிவில் ஏற்பட்ட மண்மேடு சரிவில் 7 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியிருப்பதோடு, 64 குடும்பங்களைச்சேர்ந்த 212 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் பொதுக்கட்டிடத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேற்படி பெருந்தோட்டப்பிரிவின் இலக்கம் 3 தமிழ் வித்தியாலய கட்டிடத்தொகுதியிலேயே, பாதிக்கப்பட்ட 212 பேரும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (19) இரவு ஏற்பட்ட மேற்படி அனர்த்தத்தினால் பலத்த காயங்களுக்குள்ளான 7 பேரில் நால்வர் கொஸ்லந்தை அரசினர் வைத்தியசாலையிலும், மூவர் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கபரகலை பெருந்தோட்டப்பிரிவில் இரு நீண்ட வரிசை குடியிருப்புகளின் மீதே மண்மேடு சரிந்துள்ளது.
இம் மண்மேடு சரிவினால் உயிராபத்துக்கள் ஏதும் இடம்பெறவில்லை. பொருள் சேதம் பெருமளவில் ஏற்பட்டுள்ளது.
மேலும், பண்டாரவளையிலிருந்து பூனாகலை செல்லும் வழியில் ஆங்காங்கே மண்மேடுகள், கற்பாறைகள் சரிந்துள்ளன. வாகனப் போக்குவரத்துக்களும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

பதுளை, மஹியங்கனை , கண்டி வீதியிலும் கற்பாறைகள் , மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளதினால், 18 வளைவு பிரதான பாதை காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. இப்பாதை வழியாக செல்வோர் மாற்றுப்பாதைகளைப் பயன்படுத்துமாறு, போக்குவரத்துப்பிரிவு பொலிசார் , வாகன சாரதிகளைக் கேட்டுள்ளனர்.

