கட்சி பேதமின்றி தேர்தலுக்காக ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அரசாங்கம் பல்வேறு பொய்யான காரணங்களை முன்வைத்து மக்களை ஏமாற்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்துள்ளது. எனினும் அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத முயற்சிகளை முறியடித்து தேர்தலை நடத்துமாறு கட்சி பேதமின்றி அனைவரும் இணைந்து குரலெழுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசாங்கம் முன்வைக்கும் சகல காரணங்களும் பொய்யானவையாகும். இது நாட்டு மக்களை ஏமாற்றும் விடயமாகும். இந்த ஜனநாயக விரோத செயலைத் தொடர அரசாங்கம் மேலும் பல யுக்திகளைப் பயன்படுத்தி வருகிறது. கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளை வேறு வழிகளில் மீள அழைக்கும் தீவிர ஜனநாயக விரோத நடவடிக்கையில் இந்த அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த கெடகொட மற்றும் எதிரிமான்ன ஆகியோரின் முன்மொழிவுகள் ஊடாக இந்த அரசியலமைப்பிற்கு முரணான மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டாலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றும் சர்வஜன வாக்கெடுப்பு வெற்றியின் பின்னர் இந்த தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணை சட்டமாக செயற்படுத்தப்பட வேண்டுமென சட்டமா அதிபர் சட்ட வியாக்கியாணம் வழங்கியுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. இந்த முயற்சியை முறியடிக்க சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதிமன்றத்தின் உதவியை நாடி இதனை சட்டரீதியாக தோற்கடிப்பதுடன், எதிர்காலத்தில் தேர்தல் முறைமைக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் , ஜனநாயக விரோத செயற்பாடுகளை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஜனநாயக கட்டமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும். தேர்தலை வெளிப்படைத்தன்மையுடன் சரியான நேரத்தில் நடத்துவது ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம், ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் சகலரினதும் பொறுப்பாகும்.

இந்த ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வேலைத்திட்டதை ஆரம்பிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அத்துடன் தேர்தலை நடத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்திற்குச் சென்ற போது, அரசாங்கத்தின் உறுப்பினர்கள் நீதிபதிகளை பாராளுமன்றத்தின் சிறப்புரிமைக் குழுவின் முன் நிறுத்த முற்பட்டனர். உயர் நீதிமன்றத்தையும் அதன் பக்கசார்பற்ற நீதிபதிகளையும் கூட சங்கடப்படுத்தும் வகையில் அவர்கள் செயல்படுகிறார்கள்.

நிறைவேற்றதிகாரம் கூட நீதித்துறையில் தலையீடு செய்கின்றது. கொள்கைகள் எதுவாக இருந்தாலும் இந்நேரத்தில் தேர்தலை நடத்த ஆளும் எதிர்க்கட்சிகள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *