தவறிழைப்பவர்கள் எவராயினும் அவர்களுக்கெதிராக பக்கசார்பின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த அரசாங்கத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஆளுந்தரப்பு எம்.பி.யான அலி சப்ரி ரஹீமுக்கும் ஒருதலை பட்சமாகவும் , கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பாதகமாகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வார்த்தைப் பிரயோகம் மற்றும் அவர் செயற்பட்ட விதம் என்பவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர் தனது சிறப்புரிமை மீறப்படுவதாக பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் அறிவிக்கவிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
ஆனால் ஆளுந்தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை விட பாரிய தவறுகளை இழைத்திருந்தாலும் , மிகவும் பாதுகாப்பாக சமூகத்தில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அலி சப்ரி ரஹீம் 3 கிலோ தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கடத்த முற்பட்ட அன்றைய தினத்தில் கூட பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டார்.
700 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட வேண்டிய இடத்தில் , 7.4 மில்லியன் மாத்திரமே அறவிடப்பட்டுள்ளது. இவ்வாறு சட்ட விரோத செயலில் ஈடுபட்ட ஆளுந்தரப்பு எம்.பி. பாராளுமன்றத்துக்கு வருகின்றார். ஆனால் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி. கைது செய்யப்படுகின்றார். இது இனவாத கருத்தல்ல.
பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளாவர். அவர்கள் ஏதேனும் தவறிழைத்தால் சட்டம் அனைவரும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த அரசாங்கத்தில் ஆளும் , எதிர்தரப்பு எம்.பி.க்களுக்கு வெ வ்வேறு வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தெற்கு மக்களுக்கு நாடகமொன்றை அரங்கேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. சிங்கள பௌத்த மக்களிடம் வடக்கின் தமிழ் பிரதிநிதியொருவரை கைது செய்துவிட்டோம் எனக் காண்பிக்க முயற்சிக்கிறது. இது தேர்தலை இலக்காகக் கொண்டு அரங்கேற்றப்படும் நாடகமாகும் என்றார்.

