திய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளமையால், அதற்கு பதிலாக ஒலி/ஒளிபரப்பு அதிகாரசபை சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது முயற்சிக்கப்படுகிறது.
இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கும் ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் பல வழிகளிலும் முயற்சித்தது. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
அதன் காரணமாக கருத்து சுதந்திரத்தை முடக்கும் நோக்கில் தற்போது ஒலி/ஒளிபரப்பு அதிகாரசபை சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சட்ட மூலத்தின் கீழ் இலத்திரனியல் ஊடகங்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன.
ஒவ்வொரு ஊடக நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு வகையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பக்கசார்பின்றி செய்திகளை வெளியிட முடியாது.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கமைய உண்மையான செய்திகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் , கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குறித்த சட்ட மூலத்தின் ஊடாக இவை எவற்றையுமே நடைமுறைப்படுத்த முடியாது.
சட்டம் , அமைதியை சீர்குலைக்கும் வகையில் செய்திகளை வெளியிட முடியாது என்றும் , அவ்வாறான செய்திகள் வெளியிடப்பட்டால் குறித்த ஊடக நிறுவனத்துக்கான அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறெனில் அனைத்து ஊடகங்களிலும் ஒரு பக்க சார்பான செய்திகளை மாத்திரமே வெளியிட முடியும்.
இது ஜனநாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய தாக்குதலாகும். எனவே இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படக் கூடாது. மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் முன்னின்று செயற்படும் என்றார்.

