நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் லீக் போட்டியில் விளையாடிய போது நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் காயமடைந்தார். இந்த சூழலில் எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை மிஸ் செய்ய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு வலது கால் மூட்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை நியூஸிலாந்து கிரிக்கெட் உறுதி செய்துள்ளது.
அவருக்கு அடுத்த மூன்று வார காலத்திற்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளது. மேலும், இந்த காயத்தில் இருந்து மீண்டு, உலகக் கோப்பை தொடரில் அணியை வழிநடத்தும் உடற்திறனை அவர் கொண்டிருப்பாரா என்பதும் இப்போதைக்கு சந்தேகம்தான் என தெரிகிறது.
“இந்த நேரத்தில் எனக்கு தேவைப்படும் ஆதரவை வழங்கி வரும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது மாதிரியான காயம் ஏற்படுவது ஏமாற்றம் தருகிறது. இருந்தாலும் இப்போது எனது கவனம் அறுவை சிகிச்சை மற்றும் காயத்தில் இருந்து மீண்டு வருவதிலும் இருக்கிறது. களம் திரும்ப சில காலம் பிடிக்கலாம். ஆனால், விரைந்து களம் திரும்ப முயற்சி செய்வேன்” என வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி ஐசிசி தொடர்களில் சிறப்பாக செயல்படும். 2019 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் 2021 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளது. அதோடு 2021 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ளது. சிறந்த பேட்ஸ்மேனும் கூட. அவர் இல்லாமல் நியூஸிலாந்து அணி களம் காண்பது சற்று பின்னடைவே. வரும் அக்டோபர் மற்றும் நவம்பரில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.

