ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 205 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணியானது 17.4 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கொல்கத்தா அணியின் வெற்றியில் 19 வயதான அறிமுக சுழற்பந்து வீச்சாளரான சுயாஷ் சர்மாவும் சிறந்த பங்களிப்பை வழங்கினார்.
வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயர் விதியின் கீழ் களம் இறங்கிய சுயாஷ் சர்மா தனது லெக் ஸ்பின்னால் தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், கரண் சர்மா ஆகியோரது விக்கெட்களை கைப்பற்றினார். முஷ்டாக் அலி அல்லது விஜய் ஹசாரே உள்ளிட்ட முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சுயாஷ் விளையாடியது இல்லை. டெல்லி யு-25 அணியில் விளையாடி வருகிறார். முதல்தர போட்டிகளின் அனுபவம் இல்லாமல் போட்டியை காண வந்த சுமார் 70 ஆயிரம் ரசிகர்களின் முன்னிலையில் எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுயாஷ் சிறப்பான திறனை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.
இத்தனைக்கும் ஏலத்தில் சுயாஷை அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு தான் கொல்கத்தா அணி வாங்கி இருந்தது. கிழக்கு டெல்லியின் பஜன்புரா பகுதியைச் சேர்ந்தவர் சுயாஷ் சர்மா. வழக்கமான லெக் ஸ்பின்னில் இருந்து சுயாஷின் பந்து வீச்சு வேறுவிதமாக இருந்தது. அவரது கையின் வேகம், லெக் பிரேக், கூக்ளி ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீண்ட தலைமுடி, வசீகரிக்கும் உடல் மொழியுடன் இளம் கன்றாக தனது வருகையை உலகம் அறியச் செய்துள்ள சுயாஷின் கிரிக்கெட் பயணம் எளிதானது இல்லை.
கொல்கத்தா, சென்னை அல்லது மும்பையைப் போன்று இல்லாமல், டெல்லி கிளப் கிரிக்கெட் லாபகரமானது அல்ல, ஏனெனில் டெல்லியில் எந்த கிளப்களும் பணம் கொடுப்பது இல்லை மற்றும் முறையான ஒப்பந்தங்கள் எதுவும் இருக்காது. டெல்லி கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் 10-15 வாக்குகளைக் கட்டுப்படுத்தும் ஒரு கிளப் அல்லது தனிப்பட்ட உறுப்பினர்களிடமிருந்து வலுவான ஆதரவு இல்லையென்றால், மாநில அணிகளில் பல்வேறு வயதுக்குட்பட்ட அணிகளில் வாய்ப்பு பெறுவது கடினம். இதுபோன்ற கிரிக்கெட் அரசியலை தனது திறமையால் வென்றே சுயாஷ் தனக்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.

