2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகள் அனைத்தையும் இந்தியா முதன்முறையாக தனித்தே நடத்துகின்றது. இதற்கு முன்பு 1987, 1996 மற்றும் 2011 உலகக் கோப்பைப் போட்டிகளை இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசத்துடன் சேர்ந்து நடத்தியது இந்தியா. இப்போது தனித்து நடத்துவதால் பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையை வெல்வது சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் பவுலர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு முதல் முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. அதே நேரத்தில் ரோகித் சர்மா கேப்டனாக சொந்த மண்ணில் கோப்பையை வெல்வதில் ஆர்வமாக இருப்பார்கள் இந்திய அணியினர். பத்தாண்டு கால ஐசிசி நடத்தும் தொடர்களை வெல்ல முடியாமல் நீடித்து வரும் கோப்பை வறட்சியை முடிவுக்கு கொண்டு வர இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள்.
2011 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால், இந்தியாவிடம் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கோப்பையை வெல்லும் சாதகமான அணிகளில் இந்தியா இருந்தாலும், பாகிஸ்தானையும் நாம் வெறுமனே அந்த ரேஸில் இருந்து தள்ளி வைக்க முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

