‘என்ன நேர்ந்தது’ என்று தேடிய ஆணைக்குழுக்கள்’ யார் அதனை செய்தது எனக் கண்டறியவில்லை – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்

இலங்கையில் கடந்தகாலங்களில் நியமிக்கப்பட்ட அனைத்து ஜனாதிபதி ஆணைக்குழுக்களும் ‘என்ன நேர்ந்தது’ என்பதைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டனவே தவிர, அவை ‘யார் அதனைச் செய்தது’ என்பதைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், எனவே தற்போதைய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் அதனை ஒத்த நடவடிக்கையா எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகள் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரதும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், இதுகுறித்து யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டம் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) அட்டூழியங்கள் இடம்பெற்ற 1989 ஜுலைமாத காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட சார்ஜன்ட் ரத்நாயக்க இன்னமும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை. ஏனெனில் இலங்கையில் நியமிக்கப்பட்ட அனைத்து ஜனாதிபதி ஆணைக்குழுக்களும் என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டனவே தவிர, யார் அதனைச் செய்தது என்று கண்டறிவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக கடந்தகால வரலாறு மீளத்திரும்புகின்றதா?

 மனித உரிமைகள் செயற்பாட்டாளரான எம்.சி.எம்.இக்பால் போன்றவர்களின் பங்கேற்புடன் முன்னர் இயங்கிய பல்வேறு ஆணைக்குழுக்கள் மிகக்கடினமாக உழைத்த போதிலும், அப்போதைய காலப்பகுதியில் சாதாரண வன்முறைகளாக விபரிக்கப்பட்டவை அனைத்தும் மிகுந்த அதிர்ச்சியளிப்பவையாகவே காணப்பட்டன.

எது எவ்வாறெனினும் வலிந்து காணாமலாக்கப்படல்களுடன் தொடர்புடைய கடத்தல்காரர்களை அடையாளங்காணமுடியும். ஆனால் 1989 ஒக்டோபர் மாதத்திலிருந்து அதுபற்றி எவரேனும் விசாரணைகளை மேற்கொண்டனரா? குறிப்பாக 1989 இல் காணாமல்போன நபரொருவர் பற்றிய தகவல்களில், அவர் தமது காவலின்கீழ் இருந்ததாக இராணுவத்தினர் (தலத்துஓயா இராணுவ முகாம்) கூறுகின்றனர். அவ்வாறெனில், அந்நபரை எவ்வித சாட்சியங்களுமின்றி காணாமலாக்கியது யார்? அக்காலப்பகுதியில் தலத்துஓயா இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியாக செயற்பட்டவர் யார்? அதனைக் கண்டறிவது அத்தனை கடினமானதல்ல.

 அதேபோன்று பிறிதொரு காணாமலாக்கப்படல் சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில், 1990 ஆம் ஆண்டு பேரதனையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் ஒருவரைக் கைதுசெய்த (பின்னர் காணவில்லை) இராணுவத்துக்குச் சொந்தமான வாகனத்தில் பதிவிலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் 2009 மேமாதம் 18 ஆம் திகதி தம்மிடம் சரணடைந்து காணாமல்போன நூற்றுக்கணக்கான தமிழர்களை பேரூந்து பதிவிலக்கமின்றி (அவர்களை அழைத்துச்சென்ற) கண்டறியமுடியாது என இராணுவம் கூறியது. 

அதுமாத்திரமன்றி 1989 ஆம் ஆண்டு இராணுவத்தைச்சேர்ந்த சீருடையணியாத சுமார் 30 – 40 பேரால் அழைத்துச்செல்லப்பட்ட தனது 20 வயது மகன் காணாமல்போனமை குறித்து முறைப்பாடளிப்பதற்கு கலகெதர பொலிஸார் அனுமதியளிக்கவில்லை என தாயொருவர் தெரிவித்துள்ளனர் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *