அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே இதனை கூறினார்.
அவர் தனது உரையில் கூறியதாவது:
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தற்போது உலகின் முன்னணி நாடாகத் திகழ்கிறது. எனது குடும்பத்தில் உள்ள 140 கோடி மக்கள் இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைவருக்கும் நான் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக நாடு இருக்கிறது. அங்கு அமைதி நிலவ வேண்டும். அமைதியின் மூலமே தீர்வு காண முடியும். தீர்வு காண்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இம்முறை இயற்கைப் பேரிடர் நாட்டின் பல பகுதிகளில் கற்பனை செய்ய முடியாத பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது. இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாட்டில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. முடிவில்லாத வாய்ப்புகளை வழங்கும் திறன் நமது நாட்டிற்கு உண்டு. COVID பெருந்தொற்றுக்குப் பிறகு புதிய உலக வரிசை, புதிய புவிசார் அரசியல் உருவாகி வருகிறது. 140 கோடி மக்களின் திறன், உலக வரிசையை மாற்றி வருவதை காணலாம். இந்தியாவின் திறன் மற்றும் சாத்தியக்கூறுகளால் நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி. G20 உச்சி மாநாட்டை நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்குக் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் G20 அமைப்பின் பல்வேறு நிகழ்வுகள் நடந்த விதம், இந்தியாவின் எளிய மக்களின் திறனையும், நாட்டின் பன்முகத்தன்மையையும் உலகிற்கு உணர்த்தி இருக்கிறது.
சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவை நாட்டை மாற்றி வருகின்றன. 2014 இல் ஆட்சிக்கு வந்தபோது உலக பொருளாதாரத்தில் இந்தியா 10 ஆவது இடத்தில் இருந்தது. 140 கோடி மக்களின் முயற்சியால் நாம் தற்போது 5 ஆவது இடத்திற்கு வந்துவிட்டோம். நாட்டை தன் பிடிக்குள் வைத்திருந்த ஊழல் அரக்கனைத் தடுத்து, நாட்டின் பொருளாதாரத்தை வலுவான நிலைக்குக் கொண்டு வந்துள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் நாடு உலகின் மிகப் பெரிய 3 பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுக்கும். இது நரேந்திர மோடியின் வாக்குறுதி.

