உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறிருக்கையில் அவர் எவ்வாறு இந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவராகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பியுள்ளார்.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக் கூட இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். எனவே இதனுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கண்டு பிடிப்பதற்கே முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சு.க. தொகுதி அமைப்பாளர்களுடனான விசேட சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளைக் கண்டு பிடிப்பதாகக் குறிப்பிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய எவரும் அதனை இது வரை செய்யவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள கத்தோலிக்க மக்கள் தொடர்பில் மிகுந்த கவலையடைகின்றோம்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை. பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு காணப்படுவது வேறு பிரச்சினையாகும். அதனை முன்னாள் ஜனாதிபதி மீது திணிப்பது பிரயோசனமற்றது.
இந்த தாக்குதல்களைப் போன்றே, ஏனைய ஆட்சியாளர்களின் காலப்பகுதியிலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அவற்றுக்கு அன்றைய ஆட்சியாளர்கள் எவரும் பொறுப்பு கூறவில்லை. அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு ஈடு செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நாட்டுக்கு வெளியிலுள்ள சில தரப்பினர் தமக்கு தேவையானவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தனர். அந்த வகையில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக் கூட இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். இனிவரும் காலங்களிலும் இவ்வாறான நிலைமை ஏற்படக் கூடும்.
எவ்வாறிருப்பினும் இதே நிலைமை தொடர்வதற்கு இடமளிக்காமல் சுயாதீனமாக எமது ஜனாதிபதியை நாமே தெரிவு செய்யும் நிலைமையை உருவாக்க வேண்டும் என்றார்.

