இலங்கையைப் பொறுத்தமட்டில் கடந்தகால வடுக்களை ஆற்றுவதற்கும், நீடித்த சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்தவேண்டியது இன்றியமையாததாகும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலெனுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான நேற்று புதன்கிழமை (30) கொழும்பில் நடைபெற்றது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இச்சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் தொடர்பான பதிவொன்றும் இடப்பட்டுள்ளது.
‘சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உண்மை, நீதிக்காக நீண்டகாலமாகப் போராடிவரும் அவர்களது குடும்பத்தாருடனான எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகின்றோம்’ என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் தினமும் ஒரு சுமையுடன் வாழ்வதாக அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கத்தூதரகம், ‘இலங்கையைப் பொறுத்தமட்டில் இதனைக் கடந்து செல்வதற்கும், நீடித்த சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்தவேண்டியது இன்றியமையாததாகும்’ என்று வலியுறுத்தியுள்ளது.

