உக்ரைன் போரில் 5 மாதங்களில் 20,000+ ரஷ்ய இராணுவ வீரர்கள் உயிரிழப்பு: அமெரிக்கா தகவல்

உக்ரைன் போரில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கெர்பி கூறும்போது, “உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு இராணுவம் சார்ந்து பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதத்தில் மட்டும் உக்ரைன் போரில் 20,000-க்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்துள்ள இராணுவ வீரர்களில் பெரும்பாலானவர்கள் பெஞ்னர் என்ற தனியார் இராணுவ கம்பெனியைச் சேர்ந்தவர்கள். இந்தப் பெரும் உயிரிழப்பு பஹ்மத் என்ற சிறு நகரை ரஷ்யா கைப்பற்றும்போதுதான் நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ப்ஹ்மத் நகரின் பெரும் பகுதியை ரஷ்யா கைப்பற்றியிருந்தாலும், இன்னமும் சில பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இது குறித்து ரஷ்யா தரப்பில், இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த மார்ச் மாதம் ரஷ்யா சென்றார். தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற புதின் – ஜி ஜின்பிங் சந்திப்பு, சர்வதேச கவனத்தை ஈர்த்தது. உக்ரைன் – ரஷ்யா இடையே அமைதி ஏற்படவே சீன விரும்புகிறது என்று ஜி ஜின்பிங் கூறியிருந்தார். ஜி ஜின்பிங்கின் மாஸ்கோ பயணத்தைத் தொடர்ந்து, அவருடன் தொலைபேசியில் உரையாடுவதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்தார். இதையடுத்து, இருவருக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது.

ரஷ்யா – உக்ரைன் போர்: நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ அமைப்பும், அமெரிக்காவும் ஆயுதங்கள் வழங்கிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *