இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் எமது நாட்டில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் – சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை

இஸ்ரேல், பாலஸ்தீன் போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்வரும் காலங்களில் அரசியல், பொருளாதார ரீதியில் எமது நாட்டுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற கோபா குழுவின் 100ஆவது ஆண்டு நிறைவு தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இஸ்ரேல்,  பாலஸ்தீன போர் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது எதிர்வரும் சில வாரங்களில் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பிராந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விடயமாகும்.

காஸாவுக்கான நீர், மின்சாரம், பொருட்கள் விநியோகம், தகவல் தொடர்பாடல் முதல் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது யுத்தம் தொடர்பில் ஜெனிவா சமவாயத்தை அல்லது சர்வதேச யுத்த தொடர்பான சட்டத்தை முற்றாக மீறும் செயலாகும்.  இங்கு போர் இடம்பெறுவதுடன், போர்க்குற்றங்களும் கடுமையாக மீறப்பட்டு வருகின்றன.

அதனால் இந்த விடயத்தை மத ரீதியாக பார்க்காமல்  மனிதநேயத்துடன் அணுக வேண்டும். காஸாவுக்கான நீர், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பாடல் வசதியை ஏற்படுத்திக்கொடுக்க சர்வதேச சமூகம் ஒரு தரப்பை மாத்திரம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

காஸாவில் வாழும் மக்கள் இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் குழுவின் பணயக் கைதிகளாகவும் உள்ளனர். இவர்களை காப்பாற்ற சர்வதேச சமூகம் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர போரை தூண்டிவிடக் கூடாது.

இந்த விவகாரத்தில் சுயாதீன இஸ்ரேல் மற்றும் சுயாதீன பாலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்வதுதான் இலங்கையின் கடந்தகால வெளிவிவகார கொள்கையாக இருந்தது.தற்போது என்னவோ தெரியாது.

பாலஸ்தீன மக்கள் வரலாற்றுக்காலம் தொட்டு வாழ்கின்றனர். அவர்களது நிலத்தில் சுயாதீனமான தேர்தல் மூலம் ஆட்சியை தீர்மானித்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட வேண்டும். இங்கு ஆயுதக் குழுக்களுக்கும் இராணுவக் குழுக்களுக்கும் அதிகாரங்களை வழங்க அனுமதியளிக்க கூடாது.

முழு காஸாவிலும் 5 மில்லியன் வரையான மக்கள் வாழ்கின்றனர். காஸாவுக்கு வெளியில் 60இலட்சம்  வரையான மக்கள் அகதிகளாக வாழ்கின்றனர். இவர்களுக்கு நாடொன்று அவசியமாகும். அவர்கள் தமது தாய் நாடுக்கு திரும்ப வேண்டும்.

இங்கு மதச் சுதந்திரம் பேணப்பட வேண்டும். இரண்டாயிரம் வருடங்களாக இந்தப்பிரச்சினைதான் இங்கு நிலவுகிறது. ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்பினால் இத சுதந்திரம் உறுதிப்படுத்துவதன் ஊடாகவே இதனை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இந்தப்பிரச்சினை தொடர்ந்து எமது நாடுகளுக்கும் இதன் பயங்கரமான பிரதிபலன்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *