இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் என்பன குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 30 ஆம் திகதி நால்வர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கு வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான நடைமுறைக்காலம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், அதனைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கு இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீண்டும் விண்ணப்பித்துள்ளன.
இந்த விண்ணப்பங்கள் உரியவாறு பரிசீலிக்கப்பட்டு, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்குப் பூர்த்திசெய்யப்படவேண்டிய முக்கிய நிபந்தனைகள் சரியாக நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்று ஆராயப்பட்டதன் பின்னரேயே அச்சலுகையைத் தொடர்ந்து வழங்குவதா? இல்லையா? என்று தீர்மானிக்கப்படும்.
அதன்படி, இலங்கைக்கு ஏற்கனவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டபோது பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்கவேண்டும் அல்லது சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அதனைத் திருத்தியமைக்கவேண்டும் என்பதே பிரதான நிபந்தனையாக விதிக்கப்பட்டது.
இருப்பினும், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் ஊடாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பதிலீடு செய்வதற்கு முன்னைய மற்றும் தற்போதைய அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அச்சட்டமூலங்களின் உள்ளடக்கத்தின் விளைவாக கடுமையான எதிர்ப்புக்களுக்கு உள்ளானதே தவிர, எதிர்பார்க்கப்பட்டவாறு வெற்றியளிக்கவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பின்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹெய்டி ஹோற்றாலா, போலந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிஸ்லோ க்ரஸ்நோட் ஸ்கி, ஜேர்மனியை பிரதிநிதித்துவப்படுத்தும் கார்ஸ்றென் லுகே மற்றும் லிதுவேனியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அவுஸ்ரா மோல்டெய்கினி ஆகிய நால்வர் அடங்கிய பாராளுமன்றக்குழுவினர் எதிர்வரும் 30 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.
சுமார் ஒருவாரகாலம் வரை நாட்டில் தங்கியிருப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் அவர்கள், அக்காலப்பகுதியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

