ஜப்பான் கடனுதவியின் கீழ் ஆரம்பிக்கப்படவிருந்து பின்னர் கடந்த 2020ஆம் ஆண்டு கைவிடப்பட்ட இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அந்நாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இலகு புகையிரத போக்குவரத்து கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் கொழும்பிலுள்ள ஜப்பான் இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு மீண்டும் குறித்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு பொருத்தமான கால அட்டவணையை தயாரிப்பது குறித்து ஜனாதிபதியால் இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து மாலம்பே வரை குறித்த இலகு ரயில் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்டது. எனினும் 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த திட்டத்தை இடைநிறுத்துவதாக அறிவித்தார். இதன் காரணமாக இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளிலும் விரிசல் ஏற்பட்டிருந்தது.
எவ்வாறிருப்பினும் கடந்த ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் இந்த திட்டத்தை மீள ஆரம்பிப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு இனிவரும் காலங்களில் வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்படும் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி இரத்து செய்ய முடியாது என்ற சட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலும் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார். எவ்வாறிருப்பினும் ஜப்பான் இதுவரையில் எவ்வித பதிலையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

