இலங்கையின் இறுதி கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்திடம் சரணடைந்த 12 500 விடுதலைப்புலி உறுப்பினர்களும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும் இதனை விட அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் , கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகம் ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
காணாமல் போனோர் அலுவலக செயற்பாடுகளை அடுத்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இறுதிகட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் யாழில் சாதாரண மக்களை பலிகடாவாகப் பயன்படுத்திக் கொண்டு யுத்தத்தில் ஈடுபட்ட போது இரு தரப்பிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டன. விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ‘போராழிகள்’ என அவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட சுமார் 12 500 பேர் சரணடைந்திருந்தனர்.
இவ்வாறு சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகமயப்படுத்தப்பட்டனர். இன்று அவர்கள் சரியான வாழ்க்கையை வாழ்பவர்களாகவுள்ளனர். எனினும் இதனை விட அதிகமானோர் உயிரிழந்ததாகவும் அல்லது கொல்லப்பட்டதாகவும் அல்லது காணாமலாக்கப்பட்டதாகவும் சமூகத்தில் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
இது தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நான் பொறுப்பேற்கும் போது இந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் மிகவும் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்பட்டிருந்தன. 65 முறைப்பாடுகள் தொடர்பிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
எனினும் தற்போது சுமார் 3000 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு நிறைவடைவதற்குள் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். அத்தோடு இழப்பீட்டு அலுவலகத்தின் ஊடாக இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

